கடவுள் குழப்பம். கட்டுரை விடுதலை - 7.10.1963

Rate this item
(1 Vote)

கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்ட மனிதன் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் ஒருவருமே இல்லை. ஒரு வஸ்து இருந்தால்தானே அது இன்னது என்று புரிந்துகொள்ள முடியும். அது இல்லாததனாலேயே கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒருவிதமாய் கடவுளைப்பற்றி உளறிக்கொட்ட வேண் டியிருக்கிறது.

அதற்கு பெயரும் பலப்பல சொல்லவேண்டியிருக்கிறது. அதன் எண்ணிக்கையும் பலப்பல சொல்லவேண்டியிருக்கிறது. அதன் உருவமும் பலப்பல சொல்லவேண்டியிருக்கிறது. அதன் குணமும் பலப்பல சொல்லவேண்டியிருக்கிறது. அதன் செய்கையும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த இலட்சணத்தில் கடவுளைப்பற்றிப் பேசும் பெரிய அறிவாளிகள் பெயரில்லான் - உருவமில்லான் - குணமில்லான் என்பதாக உண்மையிலேயே இல்லானை இல்லான் - இல்லான் - இல்லான் என்றே அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகிறவர்களே பல பெயர், பல உருவம், பல குணம், பல எண்ணிக்கை முதலியவைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் விட கடவுள் நம்பிக்கைக்காரர்களிடம் இருக்கும் ஒரு அதிசய குணம் என்னவென்றால், எந்த கடவுளைக் கும்பிடுகிறவருக்கும். கட வுள்கள் யார்? தேவர்கள் யார்? இவர்களுக்கு ஒருவருக்கொருவ ருள்ள வித்தியாசம் என்ன என்பதில் ஒரு சிறு அறிவும் கிடையாது. -

மற்றும் ஒரு அதிசயம் - கடவுள் என்பதற்கு ஒரு சொல் வடமொழியிலும் கிடையாது, தமிழிலும் கிடையாது. தமிழில் சொல்லப்படும் கடவுள் என்கின்ற சொல்லுக்கு உண்டான கருத்துக்கு தமிழிலும் ஒரு சொல் காணப்படுவதற்கு இல்லை. அதுபோலவே அதற்கு (கடவுள் என்பதற்கு) வடமொழியிலும் சொல் காணப்படுவதற்கு இல்லை. ஆரியர் (பார்ப்பனர்) தேவர்கள் என்ற சொல்லை வேத காலத்தில் உற்பத்தி செய்து கொண்டு அதுவும் மேல் நாட்டில் அய்ரோப்பாவிலும், மத்திய ஆசியாவிலும் இருந்த பழங்கால மக்கள் கற்பித்துக்கொண்ட பல தெய்வங்களை தேவர்களாக ஆக்கி வேதத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எகிப்தியர்கள், கிரேக்கர்கள், காக்கேசிய மலைச்சாரலில் இருந்தவர்கள் முதலியவர்கள் வணங்கி வந்த தெய்வங்களே வேதத்தில் காணப்படும் அத்தனை தேவர்களுமா வார்கள்.

அதாவது,

சிவன், இந்திரன் ஆகிய இருவருக்கும் - - ஜூபிடர் 

பிரம்மாவுக்கு - சாட்டர்னஸ்

யமனுக்கு - மைனாஸ்

வருணனுக்கு - நெப்டியூன்

சூரியனுக்கு - சோல்

சந்திரனுக்கு - லூனஸ்

வாயுவுக்கு - சயோனஸ்

விஸ்வகர்மாவுக்கு -- காண்டர்போல்வரஸ்

கணபதிக்கு - ஜூனஸ்

குபேரனுக்கு - புளூட்டர்ஸ்

கிருஷ்ணனுக்கு - அப்போலா

நாரதனுக்கு - மெர்குரியன்

ராமனுக்கு - பர்கஸ்

கந்தனுக்கு - மார்ஸ்

 துர்க்கைக்கு - ஜூனோ

சரஸ்வதிக்கு - மினர்வா

ரம்பைக்கு - வீனஸ்

உஷாவுக்கு - அரோரா

பிருதிவிக்கு - சைபெல்விப்

ஸ்ரீக்கு - சிரஸ் 

என்கின்ற பெயருடன் இவை மேல்நாட்டிலிருந்த தெய்வங்களாகும்.

மற்றும் இவர்கள் நடத்தை முதலியவைகளை புரட்டு இமால யப் புரட்டு' என்கின்ற புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சாதாரணமாக தமிழனுக்கு தொல்காப்பியத்திற்கு முந்திய இலக்கிய நூலோ இலக்கண நூலோ கிடையாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஏதேதோ இருந்ததாகச் சொல்லி அவை மறைந்துவிட்டன என்கிறார்கள். இது இன் றைய சைவ - பெரியபுராணம், வைணவ இராமாயணம் போன்ற புளுகுகளில் சேர்க்கப்பட வேண்டியவைகளே தவிர காரியத்திற்குப் பயன்படக்கூடியவை அல்ல. தவம்

இந்த கடவுள் என்னும் சொல்லும் தமிழனுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டில் கற்பிக்கப்பட்ட சொல்லே அல்லாமல் பழங்காலச் சொல் லென்று சொல்ல முடியாது. தமிழனது இலக் கியங்களும் தொல்காப்பியத்திற்கும் பிற்பட் டவைகளேயாகும். தொல்காப்பியனையும் ஆரியன் என்றுதான் சொல்லவேண்டும். தொல்காப்பியமும் ஆரியன் வருகைக்குப் பிற்பட்டதேயாகும்.

இன்றைய நம் கடவுள்கள் அத்தனையும் பிர்மா, விஷ்ணு, சிவன், அவனது மனைவி பிள்ளைக்குட்டிகள் யாவும் ஆரியக் கற்பனை, ஆரிய வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டவை என்ப தல்லாமல் தமிழர்க்குரியதாக ஒன்றுகூட சொல்ல முடியவில்லை. சிவனும், மாலும் (விஷ்ணுவும்) தமிழன் கடவுள்கள் என்கிறார்கள் சிலர். 

இந்த சிவன், விஷ்ணுக்களை இன்று வணங்கும் சைவ, வைணவர்கள் கோயில்களில் அவைகளுக்குக் கொடுத்திருக்கும் குணங்கள், செய்கைகள், உருவங்கள், சரித்திரங்கள் ஆகியவை களில் எது, எந்தக் கடவுள், எந்தக் கோயில் தமிழுக்கு, தமிழனுக்கு உரியது என்று எந்த சைவ, வைணவராவது சொல்ல முடியுமா? சிவன் - தமிழன் என்றாலும் விஷ்ணுதமிழனென்றாலும், சைவம் - வைஷ்ணவம் என்னும் சொற்க ளும் அதன் இலக்கணங்களும் வடமொழி முறைக்ளேயாகும். லிங்கம், சதாசிவம் முதலிய சொற்கள், அதன் கருத்துகள் ஆரிய மொழிகளேயாகும். நமது கோயில்களிலே உள்ள கடவுள், அவற்றின் சரித்திரங்கள் புராணங்கள் எல்லாமுமே வடமொழி ஆரியக் கருத்துக்களேயாகும். இன்றும் வடமொழிப் புராணங் கள் இல்லாவிட்டால் சைவனுக்கோ வைணவனுக்கோ கடவுள், மத இலக்கியங்கள் ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? ஒன்றும் காணமுடியவில்லையே? ஆரியம் இல்லையானால் சைவ, வைணவர்களுக்கு கடவுளும் இல்லை , சமயமும் இல்லை என்றுதானே சொல்ல வேண்டி இருக்கிறது. பாம்

இன்றும் நம்மில் 100-க்கு 99 பேர்களுக்கும் ராமனும் கிருஷ்ணனும் சுப்ரமணியனும் விக்னேஸ்வரனும்தானே பிரார்த் தனைக் கடவுள்களாக இருக்கிறார்கள்? எந்த சைவ, வைணவ க்ஷேத்திரங்களை எடுத்துக் கொண்டாலும் காசி முதல் கன்னியா குமரி வரை ஆரியக் கடவுள்கள் கோயில்களையும் தீர்த்தங்க ளையும் கொண்டவைகளாகத்தானே காண்கிறோம்? தமிழனுக்குகோயில் ஏது? தீர்த்தங்கள் ஏது?

ஆகவே தமிழனுக்கு கடவுள்கள் இல்லை , கோயில்கள் இல்லை, தீர்த்தங்கள் இல்லை, திருப்பதிகள் இல்லை . -

இருப்பதாக காணப்படும், சொல்லப்படும் அத்தனையும் பார்ப்பான் பிழைக்கவும், அவன் ஆதிக்கத்திற்கும் நம்மை இழி மகனாக்கவும் மடையனாக்கவும் ஏற்படுத்தப்பட்டவைகளேயாகும் என்பதை உணர்ந்து மக்கள் ஒழுக்கத்துடனும் நாணயத்துடனும் நன்றி அறிதலுடனும் வாழ்வதையே நெறியாகக் கொண்டு வாழ வேண்டுமென்பதாக திராவிடர் கழகத் தோழர்கள் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

விடுதலை - 7.10.1963

Read 244 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.